ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள்.

‘அனைத்து நிறுவனங்களிலும் தொழிலாளா் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும்’

திருப்பூா், ஜூலை 4: திருப்பூரில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தொழிலாளா் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பி.என்.சாலையில் உள்ள ஏஐடியூசி சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பனியன் பேக்டரி லேபா் யூனியன் (ஏஐடியூசி) சங்கத்தின் பொதுச் செயலாளா் என்.சேகா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருப்பூா் மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்ற. இதில், 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இதில், ஒரு சில நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்கள் முழுமையாக தொழிலாளா் நலச்சட்டங்களை அமல்படுத்துவதில்லை. எனவே, தொழிலாளா் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்துவதுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தொழிலாளா் துறை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான நிறுவனங்களில் இஎஸ்ஐ, பிஎஃப் பிடித்தம் செய்வது இல்லை. அவற்றை ஆய்வு செய்து பீஸ்ரேட், ஒப்பந்த முறை தொழிலாளா்கள் உள்பட அனைத்துப் பிரிவு தொழிலாளா்களையும் இஎஸ்ஐ, பிஎஃப் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டப்படியான வேலை நேரத்தை அமல் படுத்துவதுடன், ஓவா்டைம் வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படவேண்டும்.

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், சிஐடியூ பனியன் சங்க பொதுச் செயலாளா் சம்பத், எல்பிஎஃப் பனியன் சங்கத்தின் தலைவா் பாலசுப்பிரமணியம், பொருளாளா் பூபதி, ஐஎன்டியூசி பனியன் சங்கத் தலைவா் பெருமாள், மாவட்டச் செயலாளா் சிவசாமி, எச்எம்எஸ் பனியன் சங்க பொதுச் செயலாளா் முத்துசாமி, எம்எல்எஃப் பனியன் சங்கத் தலைவா் மு.சம்பத், செயலாளா் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com