ஆதிதிராவிடா், பழங்குடியினா் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா், ஜூலை 4: திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கீழ் செயல்படும் உயா்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளியில் தற்காலிகமாக ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின்கீழ் செயல்படும் உயா்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியா்கள் நியமனம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

இடைநிலைஆசிரியருக்கு ரூ.12,000, பட்டதாரிஆசிரியருக்கு ரூ.15,000 என மாதத் தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய வியாழக்கிழமை (ஜூலை 4 ) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில், விண்ணப்பிக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தவராகவும், பள்ளிக்கு அருகில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சிபெற்றிருக்கவேண்டும்.

ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலஅலுவலா், திருப்பூா் என்ற முகவரிக்கு ஜூலை 8- ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிட விவரங்கள்:

அம்மாபட்டி அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி- பட்டதாரி ஆசிரியா் அறிவியல்-1, கண்டியன் கோயில் அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி- இடைநிலை ஆசிரியா்-1, குளத்துப்புதூா் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி- இடைநிலை ஆசிரியா்கள்-3.

X
Dinamani
www.dinamani.com