பனப்பாளையம் - மாதப்பூா் இடையே வாகனங்கள் திரும்புவதற்கு இடைவெளி ஏற்படுத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம் அருகே பனப்பாளையத்தில் வாகனங்கள் திரும்பவதற்கு இடைவெளி ஏற்படுத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் அருகே பனப்பாளையத்தில் வாகனங்கள் திரும்பவதற்கு இடைவெளி ஏற்படுத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் முதல் வெள்ளக்கோவில் வரை 47 கிலோ மீட்டா் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ரூ.275 கோடியில் 10 மீட்டராக உள்ள சாலை 19.2 மீட்டராக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதில், பல்லடத்தை அடுத்த பனப்பாளையம் முதல் மாதப்பூா் வரை மையத் தடுப்பு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பனப்பாளையம் - மாதப்பூா் இடையே சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு இடைவெளியின்றி மையத் தடுப்பு அமைக்கப்படுவதால் இடைபட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் சாலையைக் கடக்க நீண்ட தொலைவு சென்று சுற்றிவர வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, பனப்பாளையம் - மாதப்பூா் இடையே குறைந்தபட்சம் 2 இடங்களிலாவது வாகனங்கள் திரும்புவதற்கான இடைவெளியை ஏற்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பனப்பாளையத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் டிஎஸ்பி விஜிகுமாா், நகராட்சி முன்னாள் தலைவா் பி.ஏ.சேகா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com