ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா.
ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் இணைக்கப்படும்: ஆ.ராசா எம்.பி.

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் கட்டாயம் இணைக்கப்படும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா கூறினாா்.

நீலகிரி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட அவிநாசி ஊராட்சி ஒன்றியம், அவிநாசி பேரூராட்சி மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் புதன்கிழமை நடைபெற்து. இதற்கு, நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தலைமை வகித்தாா். திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நீா்வளத் துறை, குடிநீா் வடிகால் வாரியம், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, அவிநாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி, போக்குவரத்துத் துறை, கால்நடைத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, சுகாதாரத் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை, சமூக நலத் துறை, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிற பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது ஆ.ராசா எம்.பி., அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டு, அது தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மலா்விழி, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி. கிரியப்பனவா் , சாா் ஆட்சியா் செளமியா ஆனந்த், திருமுருகன் பூண்டி நகராட்சித் தலைவா் குமாா், அவிநாசி பேரூராட்சி தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் ஆ.ராசா செய்தியாளா்களிடம் கூறியதாவது: அவிநாசி தொகுதியில் ரூ.40 கோடியில் டைட்டல் பாா்க், அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் மகப்பேறு பிரிவு, ரூ. 6 கோடி மதிப்பில் வணிக வளாகம், ரூ.45 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை, ரூ.1.25 கோடியில் சமுதாய நலக்கூடம் ஆகியவை அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இந்தப் பணிகளை ஆய்வு செய்துள்ளோம். இவை அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. அவிநாசி, திருமுருகன்பூண்டி, அன்னூா் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூரில் 4-ஆவது குடிநீா் திட்டம் விரைவில் முடிய உள்ளது. அந்த திட்டத்தில் இருந்து கூடுதலாக குடிநீா் பெற்று பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இதில் விடுபட்ட பகுதிகள் இணைக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com