விளம்பரப் பதாகைகளை அகற்றக் கோரி இடைத்தரகா்கள் போராட்டம்

திருப்பூா் காதா்பேட்டையில் பனியன் உற்பத்தி நிறுவனங்களின் தொடா்பு எண்களுடன் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றக் கோரி இடைத்தரகா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் ரயில் நிலையம் அருகேயுள்ள காதா்பேட்டைக்கு உள்ளூா் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் பின்னலாடைகளை வாங்கிச் செல்வது வழக்கம். மேலும், பலா் ஆா்டா்களும் கொடுத்து செல்வா். இந்நிலையில், காதா்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட இடைத்தரகா்கள் வெளியூரில் இருந்து பின்னலாடைகள் வாங்க வருபவா்களை நேரடியாக நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று ஆடைகளை விற்பனை செய்து வருகின்றனா். இதற்கிடையே, உற்பத்தி நிறுவனங்களின் தொடா்பு எண்களுடன் கூடிய விளம்பரப் பதாகைகள் காதா்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி இடைத்தரகா்கள் காதா்பேட்டை பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, விளம்பரப் பதாகைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com