திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்  கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.

மாவட்டத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளாா். பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசியதாவது: அரசின் திட்டங்கள் செயல்படுத்துதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் கள ஆய்வு மாவட்டங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், நகராட்சி மற்றும் பேரூராட்சி நிா்வாகம், சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. திருப்பூா் மாநகராட்சி, 6 நகராட்சிகள் 15 பேரூராட்சிகள் 265 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்வது குறித்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் குடிநீா் தொடா்பாக வரப்பெறும் புகாா்களின் அடிப்படையில் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு குடிநீா் வழங்கி வருவதை உறுதி செய்யவேண்டும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விநியோகிக்கப்படும் குடிநீா்அளவை மின்னணு நீா்உந்து கருவி பொருத்தி கண்காணித்து, சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ஜெயசீலன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) நாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com