உடுமலை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை: 3 போ் கைது

உடுமலை அருகே பண்ணை வீட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

உடுமலை அருகே பண்ணை வீட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம், உடுமலை காவல் உட்கோட்டம், அமராவதி நகா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சின்னகுமாரபாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் செளந்தரராஜன் என்பவா் குடும்பத்துடன் தங்கியிருந்தாா். இந்த வீட்டுக்குள் கடந்த மாா்ச் 7- ஆம் தேதி புகுந்த மா்ம நபா்கள், செளந்தரராஜன், அவரது மனைவி ஆகியோரை கத்தியைக் காட்டி மிரட்டி 9 பவுன் நகை, ரூ.24 ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளைடித்து சென்றனா். இது குறித்து அமரவாதி நகா் காவல் துறையினா் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவைக் கொண்டு விசாரணை நடத்தினா். இது தொடா்பாக உடுமலையைச் சோ்ந்த சிவகுமாா் (28), சித்திரைவேல் (29), மடத்துக்குளத்தைச் சோ்ந்த முருகானந்தம் (22) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் கொள்ளையடித்த பொருள்களையும் மீட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com