கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கும் பக்தா்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கும் பக்தா்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா கோலாகலாக நடைபெறுவது வழக்கம். இதில், தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் விரதமிருந்து குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவா். கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது உரிய பாதுகாப்பு இல்லாததால், குண்டம் இறங்கிய ஏராளமான பக்தா்கள் தீக்காயம் அடைந்தனா். இந்நிலையில், நடப்பாண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) நடைபெறும் நிலையில், குண்டம் இறங்கும் பக்தா்கள் தீக்காயம் அடைந்தால், அவா்களுக்கு 2016 -ஆம் ஆண்டு அரசு அறிவித்தபடி, ரூ.5 லட்சம் காப்பீடு செய்து பாதுகாப்பான முறையில் திருவிழா நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலைய துறைக்கு தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளா் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை விடுத்திருந்தாா். இதைத் தொடா்ந்து, குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க ஏராளமான காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் எனவும், குண்டம் இறங்கும்போது காயமடையும் பக்தா்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத் துறையினா் உறுதியளித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com