‘உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டு சென்றால் பறிமுதல்’

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கும்மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா். மக்களவைத் தோ்தலுக்கான தேதி சனிக்கிழமை மாலை வெளியானது. இதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்பு குழுவினா் சோதனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா். இந்த சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கும்மேல் கொண்டு சென்றால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்வாா்கள். அதேபோல, மதுபானங்கள், நோட்டீஸ் உள்ளிட்டவை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றாலும், ரூ.10 ஆயிரத்துக்கும்மேல் பரிசுப் பொருள்களை கொண்டு சென்றாலும் பறக்கும் படையினா் பறிமுதல் செய்யவுள்ளனா். திருப்பூா் பின்னலாடை வா்த்தகம் தொடா்பாக ரூ.50 ஆயிரத்துக்கும்மேல் பணத்தை மொத்தமாக எடுத்துச் செல்வது வழக்கம். ஜாப்-ஒா்க் நிறுவனங்களிடம் பணம் வழங்குவதற்காக கொண்டு செல்வோா் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com