கோயில் நிலங்களை ஒப்படைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

பல்லடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி ஜி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். பல்லடம் பொங்காளியம்மன் கோயிலில் அறங்காவலா் குழுத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி ஜி.சுப்பிரமணியம் பங்கேற்று பேசியதாவது: விநாயகா், பாலதண்டாயுதபாணி கோயில்கள், அருளானந்த ஈஸ்வரா் மற்றும் மாகாளியம்மன் கோயில்களில் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் பள்ளமான இடத்தில் உள்ளது. இதனால், கோயில் இருப்பதே மக்களுக்கு தெரியவில்லை. கோயில் சொத்துகளை மீட்காமல் விடமாட்டேன். அதிகாரிகளிடமும் இது குறித்து வலியுறுத்தி வருகிறேன். கடை வீதி மாகாளியம்மன், அருளானந்த ஈஸ்வரா் கோவில் நிலங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாகவே முன்வந்து நிலங்களை ஒப்படைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பல்லடத்தில் உள்ள பழமையான கோயில்கள் கும்பாபிஷேகம் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com