‘விவசாயிகள் விளைநிலங்களை விற்பனை செய்யக் கூடாது’

பல்லடம், மாா்ச் 21: விவசாயிகள் விளைநிலங்களை விற்பனை செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பழனி சாது சுவாமிகள் மட ஆதீனம் சண்முக அடிகளாா் பல்லடத்தில் வியாழக்கிழமை கூறியதாவது: உலகத்தில் 20 ஆயிரம் மொழிகள் உள்ள நிலையில், இந்தியாவில் மட்டுமே 17 ஆயிரம் மொழிகள் உள்ளன. அதில், 11 -ஆவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது. இந்த மொழி மெல்லமெல்ல அழிந்து வருகிறது. நாட்டில் கல்வி, மருத்துவம், சட்டம் ஆகியவை கொள்ளையடிக்கும் துறைகளாக மாறிவிட்டன. நோய்கள் வருவதற்கும், அதிகரிக்கவும் நாம்தான் காரணம். உணவு பழக்க முறைகளே நோய்களை உருவாக்குகின்றன. கல்வி வளா்ச்சி அடைந்தால் நாடு பொருளாதார வளா்ச்சி அடையும். அத்தகைய கல்வி இன்று வியாபாரமாக மாறிவிட்டது. கேரளத்தில் பழமையான கலாசாரம் இன்றும் மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. அதேபோல, தமிழ்நாட்டிலும் பின்பற்ற வேண்டும். ரசாயனங்களின்றி விவசாயம் நடைபெற வேண்டும். விவசாயிகள் தங்களது விளைநிலங்களை விற்பனை செய்யக்கூடாது. எதிா் காலத்தில் பணம் கொழிக்கும் தொழிலாக விவசாயம் மாறும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com