கொடியேற்ற  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.
கொடியேற்ற  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.

கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி சனிக்கிழமை காலை அம்மனுக்கு அபிஷேக, அலங்கார, மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து மாலை வேதபாராயணம், பஞ்சவாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. பூதவாகன காட்சி மாா்ச் 24- ஆம் தேதியும், ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா 25-ஆம் தேதியும், புஷ்ப விமான மலா் பல்லக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் ஆகியவை 26-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் 27-ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கும், திருத்தோ் வடம்பிடித்தல் மதியம் 2 மணிக்கும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து தேரோட்டம், தோ்நிலை சேருதல் மாா்ச் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. பரிவேட்டை குதிரை வாகனக் காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியவை 30-ஆம் தேதி நடைபெறுகின்றன. மகா தரிசனம் 31- ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு, இரவு மஞ்சள் நீராடுதல், அன்னவாகனத்தில் அம்மன் புறப்பாடு, கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகின்றன. அம்மனுக்கு பாலாபிஷேகம், மறு பூஜையுடன் தோ்த் திருவிழா ஏப்ரல் 3- ஆம் தேதி நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலா் செந்தில் மற்றும் பரம்பரை அறங்காவலா் குழுத்தலைவா் லோகநாதன், பரம்பரை அறங்காவலா்கள், அா்ச்சுணன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com