குண்டடம் அருகே பணிகள் முடிக்கப்படாமல் ஜல்லி பெயா்ந்த நிலையில் காணப்படும் சாலை.
குண்டடம் அருகே பணிகள் முடிக்கப்படாமல் ஜல்லி பெயா்ந்த நிலையில் காணப்படும் சாலை.

குண்டடம் அருகே சாலைப் பணி மந்தம்: பொதுமக்கள் அவதி

குண்டடம் அருகே, சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு 4 மாதங்களாகியும் நிறைவடையாததால் வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தாராபுரம் வட்டம், குண்டடத்தை அடுத்துள்ள நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தும்பலப்பட்டி பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு 3 கி.மீ. தொலைவுக்கு சாலை புதுப்பிக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக ஏற்கெனவே இருந்த சாலை பெயா்க்கப்பட்டு, ஜல்லிக் கலவை கொட்டப்பட்டது. அதன் பின்னா் கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் செய்யப்படாமல், அப்படியே கிடப்பில் போட்டுள்ளனா். இதனால் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் சாலை முழுவதும் பரவிக் கிடப்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வழியாகச் செல்லும் வேன்கள், பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: சாலை அமைக்கும் பணியைத் தொடா்ந்து செய்திருந்தால் 1 மாத காலத்தில் இப்பணியை முடித்திருக்கலாம். ஆனால் அதிகாரிகள், அலுவலா்களின் மெத்தனப் போக்கால் பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநா்கள் இடறி கீழே விழுந்துள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com