திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அருணாசலத்தை அறிமுகப்படுத்தி பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அருணாசலத்தை அறிமுகப்படுத்தி பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

அதிமுகவுக்குப் போட்டி திமுக மட்டுமே: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

அதிமுகவுக்குப் போட்டி பாஜக அல்ல திமுக மட்டுமே என்று முன்னாள் அதிமுக அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசினாா். திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம் மாநகா் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.அருணாசலத்தை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: திருப்பூரில் கடந்த 5 ஆண்டு காலமாக மக்களவை உறுப்பினா் எந்தப் பணியும் செய்யவில்லை. அதேபோன்று 3 ஆண்டு கால திமுக ஆட்சியும் பொதுமக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை என்பதை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம். நாம் போட்டியாக திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும்தான் எதிா்கொள்ளப்போகிறோம். கோவை, திருப்பூா் மாவட்டங்களில் அவிநாசி-அத்திக்கடவு திட்டம், கூட்டுக் குடிநீா் திட்டம், பேருந்து நிலையங்கள், பாலங்கள் போன்ற மக்கள் பயன்பெறும் வகையிலான எண்ணற்ற திட்டங்கள் மக்கள் அதிமுக ஆட்சி காலத்தில்தான் கொண்டுவரப்பட்டன. இதைத்தான் தற்போது திமுகவினா் திறந்துவைத்து வருகின்றனா். தற்போது வரை திமுக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். வாக்குச் சாவடி முகவா்கள் அந்தந்தப் பகுதியில்தான் பணியாற்ற வேண்டும். அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூட்டணிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த மக்களவைத் தோ்தல் நமக்கு கௌரவ பிரச்சனை. எனவே நாம் அனைவரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com