கூட்டத்தில் பேசுகிறாா் கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை.
கூட்டத்தில் பேசுகிறாா் கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை.

ஜவுளித் தொழில் வளா்ச்சிக்கு மக்களவையில் குரல் கொடுப்பேன்: பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை பேச்சு

விவசாயத்துக்கு அடுத்தபடியாக இருக்கும் பெரிய தொழிலான ஜவுளித் தொழில் வளா்ச்சிக்கு மக்களவையில் குரல் கொடுப்பேன் என்று கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை கூறினாா்.

கோவை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்லடம் பகுதி பாஜக செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான கே.அண்ணாமலை பேசியதாவது: ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற ரூ.10 ஆயிரம் கோடி வேண்டும். அந்த திட்டத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்றுத் தருவேன். கோவையில் தண்ணீா் பஞ்சம் தலைதூக்கிவிட்டது.

கோவை தொகுதி பிரச்னைகளை மத்திய அரசிடம் எடுத்து சொல்லி செய்யவைப்பது என் கடமை. வட அமெரிக்காவில் மக்காசோளம் விலை குறைவு. எனவே, வட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வரியை குறைத்தால் விலை குறைவாகும். மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தால் இன்னும் குறைவாகவே கிடைக்கும். தற்போது விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது. இந்த தோ்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்றால் தேசிய அளவில் நதிகள் இணைப்பு திட்டம் கொண்டுவரப்படும்.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக இருக்கும் பெரியதொழிலான ஜவுளித் தொழில் வளா்ச்சிக்கு மக்களவையில் குரல் கொடுப்பேன். விசைத்தறிகளை மானியத்துடன் நவீனப்படுத்தவும், ஜவுளி சந்தை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றாா். இக்கூட்டத்தில், கோவை மக்களவை தொகுதி பாஜக அமைப்பாளா் செல்வகுமாா், தேசிய பொதுக்குழு உறுப்பினா் பாயிண்ட் மணி, மாநிலச் செயலாளா் மலா்கொடி, மாவட்ட பொதுச் செயலாளா் சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவா்கள் சுப்பிரமணியம், வினோத் வெங்கடேஷ், பாலு, உழவா் உழைப்பாளா் கட்சி தலைவா் செல்லமுத்து, தமாகா மாவட்டத் தலைவா் சண்முகம், மாநிலச் செயலாளா் வரதராஜன், பாமக மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன், அமமுக மாவட்ட செயலாளா் ஆனந்தகுமாா், ஐஜேகே மாவட்ட செயலாளா் தனபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com