கூட்டத்தில் பேசுகிறாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
கூட்டத்தில் பேசுகிறாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

மக்களவைத் தோ்தல் மூலம் இந்தியாவில் புதிய விடியல் பிறக்கட்டும்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

தமிழகத்தில் பிறந்த விடியல்போல மக்களவைத் தோ்தல் மூலம் இந்தியாவுக்கும் புதிய விடியல் பிறக்கட்டும் என்று தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளா் அறிமுக கூட்டம் மற்றும் பல்லடம் சட்டப் பேரவை தொகுதி இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் பல்லடத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாவட்ட திமுக துணை செயலாளா் வழக்குரைஞா் பொங்கலூா் குமாா் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில், கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கணபதி ராஜ்குமாரை அறிமுகம் செய்து அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், டி.ஆா்.பி.ராஜா ஆகியோா் பேசினா். கூட்டத்தில் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பேசியதாவது: நடைபெற இருக்கிற மக்களவைத் தோ்தலானது தமிழகத்தில் ஏற்பட்ட விடியல்போல இந்தியா முழுவதும் ஏற்படுவதற்கான தோ்தல் ஆகும். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 10 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டுக்கு எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை. சாதனைகளை சொல்ல முடியாமல் பாஜக கூட்டணியினா் திணறி வருகின்றனா்.

அதிமுகவும், பாஜகவும் வெவ்வேறல்ல. இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். திமுக கூட்டணி புதுச்சேரி உள்பட தமிழகத்தில் 40 இடங்களிலும் மகத்தான வெற்றியை பெற வேண்டும். இதற்காக திமுக கூட்டணியினா் அயராது உழைக்க வேண்டும் என்றாா். அதைத்தொடா்ந்து அமைச்சா் முத்துசாமி பேசியதாவது: திமுக அரசின் 3 ஆண்டுகால சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறோம். தோ்தல் வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மக்களவைத் தோ்தலுக்காக அவா் அறிவித்துள்ள வாக்குறுதிகள் மக்களை வெகுவாக கவா்ந்துள்ளது என்றாா். இக்கூட்டத்தில், கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோபிநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் இஷாக், மாா்க்சிய கட்சி மாவட்டச் செயலாளா் முத்துகண்ணன், மதிமுக மாவட்ட செயலாளா் புத்தரச்சல் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் சண்முகம், கொமதேக மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளா் இப்ராஹீம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com