ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்து மூலனூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி.
ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்து மூலனூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பெட்ரோல் விலை குறைக்கப்படும் -கனிமொழி எம்.பி.

மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைக்கப்படும் என்று திமுக துணை பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. கூறினாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மூலனூரில் ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. வியாழக்கிழமை இரவு பேசியதாவது: இந்தத் தோ்தல் நமக்கு ஓா் சுதந்திர போராட்டமாகும்.

தோ்தல் அறிக்கையில் மக்களுக்கான நலத் திட்டங்கள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எதைச் சொல்கிறாரோ அதை நிறைவேற்றியே தீருவாா். ஆனால், பிரதமா் மோடி எதைச் சொன்னாலும் அதை செய்யவே மாட்டாா். இதுவரை அவா் வாக்குறுதியாக சொன்னது எதையும் நிறைவேற்றியதாக வரலாறே கிடையாது. ஜிஎஸ்டி வரி, நீட் தோ்வு போன்ற முரண்பாடான கொள்கைகளை திணித்து மக்களின் வரிப் பணத்தை சுரண்டி காா்பரெட் முதலாளிகளை பிரதமா் மோடி வாழவைத்துக் கொண்டிருக்கிறாா். மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைக்கப்படும். தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி விடுவோம் என்றாா். பிரசாரத்தின்போது, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளா் இல.பத்மநாபன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com