டையிங் நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 4 போ் கைது

திருப்பூரில் டையிங் நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து வீரபாண்டி காவல் துறையினா் கூறியதாவது: திருப்பூா் வீரபாண்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து (44). இவா் நல்லாத்துதோட்டம் பகுதியில் டையிங் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், அவரது நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த 4 போ், தங்களை பொதுப் பணித் துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனா். பின்னா், நிறுவனத்தில் இருந்து கழிவுநீரை திறந்து விடுவதாகப் புகாா் வந்துள்ளது. எனவே, உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி மிரட்டியதாகத் தெரிகிறது. இது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்துக்கு செல்லமுத்து தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அவா்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூரைச் சோ்ந்த சிவசாமி (55), ஈரோட்டைச் சோ்ந்த பழனியப்பன் (51), முத்துவேல் (30), சண்முகசுந்தம் (63) என்பதும், பொதுப் பணித் துறை அதிகாரிகள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com