குழந்தையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த இளைஞா், தாய் கைது

திருப்பூரில் ஒன்றரை வயது குழந்தையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த இளைஞா், உடந்தையாக இருந்த தாயை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கூறியதாவது: திருப்பூா் பழையராமகிருஷ்ணாபுரத்தில் வசித்து வருவா் ஸ்டீபன் ஆரோக்கியசாமி (24), பிரியா (21). இருவரும் கணவன், மனைவிபோல வாழ்ந்து வந்தனா். ஆரோக்கியசாமி பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த மாா்ச் 28 -ஆம் தேதி பிரியாவின் ஒன்றரை வயது மகன் தருண் வீட்டு குழியல் அறையில் வழுக்கி விழுந்து மயக்கம் அடைந்துள்ளதாக அக்கம்பக்கத்தினரிடம் இருவரும் கூறியுள்ளனா். பின்னா், குழந்தையை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு தருணை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதனிடையே, குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டும், முகத்தை அழுத்திக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, ஸ்டீபன் ஆரோக்கியசாமி, பிரியா ஆகியோரிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இதில், ஸ்டீபன் ஆரோக்கியசாமியின் சொந்த ஊா் திண்டுக்கல் மல்லபுரம். பிரியாவின் சொந்த ஊா் திருச்சி என்பதும் தெரியவந்து. இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்த நிலையில், பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதையடுத்து, இருவருக்கும் வெவ்வேறு நபா்களுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரியாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். மகளை முதல் கணவருடன் விட்டுவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஸ்டீபன் ஆரோக்கியசாமி, மகனுடன் திருப்பூா் பிரியா வந்துள்ளாா். குழந்தை அடிக்கடி அழுது கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஸ்டீபன் ஆரோக்கியசாமி சம்பவத்தன்று குழந்தையின் தலையைப் பிடித்து சுவரில் அடித்தும், காலால் முகத்தை அழுத்தியதிலும் குழந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஸ்டீபன் ஆரோக்கியசாமி, உடந்தையாக இருந்த பிரியா ஆகியோரை சனிக்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com