சுகாதாரமற்ற முறையில் மீன், இறைச்சி விற்பனை: நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

திருப்பூா், போயம்பாளையம் பகுதி சாலைகளில் சுகாதாரமற்ற முறையில் மீன், இறைச்சி விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 7- ஆவது வாா்டு போயம்பாளையம் கிழக்கு பகுதியிலுள்ள அரசுப் பள்ளி அருகிலும், நெருபெரிச்சல் பத்திரப் பதிவு அலுவலகம் அருகிலும், தோட்டத்துபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வார விடுமுறையான ஞாயிற்றுகிழமைகளில் மீன் இறைச்சி கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகளில் திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் மீன், இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. கடைக்கு முன் மீன், இறைச்சிகளை தொங்கவிட்டுள்ளதால் ஈக்கள் மொய்க்கின்றன. உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி, சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்யப்பட வேண்டும். சில்வா் கொக்கி மற்றும் கத்தியையே பயன்படுத்த வேண்டும். கண்ணாடிப் பேழை அமைக்கப்பட வேண்டும். தரமான மரக்கட்டைகள் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் இங்கு பின்பற்றப்படுவதில்லை. மீன் இறைச்சியில் சாலையில் பறக்கும் மண் உள்ளிட்ட கழிவுகள் படிவதை சுத்தம் செய்யாமல் அப்படியே விற்பனை செய்கின்றனா். இறைச்சிக் கழிவுகளையும் சாலைகளில் வீசுவதால் துா்நாற்றம் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, சாலைகளில் சுகாதாரமற்ற முறையில் மீன் இறைச்சி விற்பனை செய்வது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com