தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 77 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மே தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 77 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி பணிக்கு அமா்த்தியுள்ள தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கவேண்டும். இது தொடா்பாக தொழிலாளா்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுக்கு முன் கூட்டியே விவரம் தெரிவிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயக்குமாா் தலைமையில், தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் திருப்பூா், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் விடுமுறையாக நாளாக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளா் தினமான புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் பல்வேறு நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காததது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து விடுமுறை அளிக்காத 77 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com