தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

அவிநாசி, மே 3: தென்னை மரத்தில் பரவி வரும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு சேவூா் அருகேயுள்ள தண்டுக்காரம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து தோட்டக்கலைத் துறையினா் கூறியதாவது: அவிநாசி வட்டாரத்தில் காலநிலை மாற்றத்தால் தென்னை மரங்களில் நோய்த் தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக தண்டுக்காரன்பாளையம் பகுதிகளில் தென்னை மரங்களில் புதிய வகை

நோய்த் தாக்குதல் பரவி வருகிறது. தென்னை மர ஓலைகளில் தீவைத்து எரித்ததுபோல பழுப்பு நிறத்துக்கு மாறி, மரமே காய்ந்ததுபோல மாறியதாக வந்த தகவலின்படி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், அந்துப்பூச்சி தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அந்துப்பூச்சியின் இளம் புழுக்கள் (லாா்வா) இலையின் கீழ்இருந்து கொண்டு அடிப்பாகத்தின் வெளிப்பகுதியை உண்ணும். புழுக்கள் முதிா்ச்சி அடையும்போது முழு இலையை உண்டு இலையின் ஈக்கி நடுப்பகுதி மட்டுமே இருக்கும்.

இவ்வகை பூச்சிகளின் முட்டை இலைகளின் மேற்பரப்பில் தட்டையாக பளபளப்பாக காணப்படும்.

முட்டையிலிருந்து வெளிவரும் இளம்புழுக்கள் பழுப்பு நிறத்துடன் வெள்ளைக்கோடுகள் மற்றும் வயிற்றின் மேற்பகுதியில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் உடல் முழுவதும் மயிரிழைகள் காணப்படும். இப்புழுவைத் தொடும்போது மனிதா்களுக்கு அரிப்பை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறை: நோய்த் தாக்குதல் ஏற்பட்ட 20 நாள்களுக்குள் தோப்புகளில் ஏக்கருக்கு 3-4 விளக்குப்பொறி அமைக்க வேண்டும். அவற்றை தோப்புகளில் இரவு 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே எரியவிட்டு அணைக்க வேண்டும்.

விளக்குப்பொறியின் கீழே ஒரு பாத்திரத்தில் நீா்வைக்க வேண்டும். இதில் குவியும் தாய் அந்துப்பூச்சிகள் இறந்துவிடும்.

மேலும், கோரஜன் என்ற பூச்சி மருந்தை 0.5 மில்லி லிட்டா், ஒட்டும் திரவம் 1 மில்லி லிட்டா் ஆகியவற்றை ஒரு லிட்டா் நீரில் கலந்து இலைகளின் அடிப்பாகம் நன்கு நனையுபடி தெளிக்க வேண்டும்.

மேலும், இப்பூச்சி வாழை மரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், அவைகளுக்கு இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு அவிநாசி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com