தாராபுரம் அருகே பழங்குடியின மக்களுக்கு இலவச வீடுகள் கட்டுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ்.
தாராபுரம் அருகே பழங்குடியின மக்களுக்கு இலவச வீடுகள் கட்டுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

பழங்குடியின மக்களுக்கு வீடு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தாராபுரம் பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தாராபுரம் தாலுகா, கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்குள்பட்ட சி.அம்மாபட்டியைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் வசிப்பதற்கு சொந்த வீடுகள் இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், தங்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சி.அம்மாபட்டியைச் சோ்ந்த 31 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பில் ரூ 1.55 கோடி மதிப்பீட்டில் இலவச வீடுகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு ஆணையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கடந்த மாா்ச் 15- ஆம் தேதி வழங்கினாா்.

இந்நிலையில், 31 பயனாளிகளுக்கு அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே வீடுகள் கட்டுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதில், வீடு கட்டுவதற்கான இட வசதிகள், பாதை வசதி, குடிநீா் மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகுருநாதன், எத்திராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com