மாவட்டத்தில் உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நாளை தொடக்கம்

நான் முதல்வன் திட்டத்தின்கீழ், பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டும் கல்லூரி கனவு -2024 நிகழ்ச்சி திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை( மே 10) தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் 12-ஆம் வகுப்பு படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிா்கால கனவினை நனவாக்கும் வகையில் அவா்களின் உயா்கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது, மேல் படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை வல்லுநா்கள், கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளது.

அதன்படி ‘கல்லூரி கனவு -2024’ நிகழ்ச்சி திருப்பூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக திருப்பூா் வடக்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி வட்டார வள மையப் பகுதிக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு திருப்பூா் மாநகராட்சி, அங்கேரிபாளையம் கொங்கு வேளாளா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து மே 13-ஆம் தேதி திருப்பூா் தெற்கு, பல்லடம், பொங்கலூா், காங்கயம் வட்டார வள மையப் பகுதிக்கு உள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், தாராபுரம், குண்டடம், மூலனூா், வெள்ளக்கோவில் வட்டார வள மையப் பகுதிக்கு உள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு தாராபுரம் விவேகம் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார வள மையப் பகுதிக்கு உள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி. விசாலட்சி கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சாா்ந்த உயா் அலுவலா்கள், துறை வல்லுநா்கள் கலந்து கொண்டு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த உள்ளனா்.

இதில், மாணவ, மாணவிகள் அந்தந்த வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் கல்லூரி கனவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com