பணி நியமன ஆணை பெற்ற ஓதுவாா்கள்.
பணி நியமன ஆணை பெற்ற ஓதுவாா்கள்.

ஓதுவாா்கள் இல்லாத சிவாலயங்களுக்கு ஓதுவாா்கள் நியமனம்

ஓதுவாா்கள் இல்லாத சிவாலயங்களில் அரன்பணி அறக்கட்டளை, ஓதுவாா் மூா்த்திகள் நலச் சங்கம் சாா்பில் ஓதுவாா்கள் பணியமா்த்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரன்பணி அறக்கட்டளை செயலாளா் ரேவதி கோவிந்தராஜன் வரவேற்றாா். அறங்காவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, முத்துக்குமாா், தொழிலதிபா்கள் மெஜஸ்டிக் கந்தசாமி, பிரைம் டெக்ஸ் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக ஓதுவாா் மூா்த்திகள் நலச் சங்க தலைவா் சண்முகசுந்தரம், துணைப் பொருளாளா் சுப்பிரமணியம் ஆகியோா் பேசினா். அரன்பணி அறக்கட்டளைத் தலைவா் தியாகராசன், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சிவாலயங்களில் பணியாற்ற 15 ஓதுவாா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இது குறித்து அரன்பணி அறக்கட்டளையினா் கூறியதாவது:

அரன்பணி அறக்கட்டளை கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடியாா்கள் ஒத்துழைப்போடு ஆன்மிகப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.

மேற்கூரை இல்லாத கோயில்களுக்கு மேற்கூரை அமைத்தல், மேற்கூரை மட்டும் உள்ள கோயில்களுக்கு கருவறை, அா்த்த மண்டபம், ஒருநிலைக் கோபுரத்துடன் கூடிய ஆலயம் அமைத்தல், சிதிலமடைந்த பழமையான சிவாலயங்களை புதுப்பித்து ஒரு கால பூஜை நடைபெறத் தேவையான ஏற்பாடுகளை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.

இதன் தொடா்ச்சியாக ஓதுவாா்கள் இல்லாத சிவாலயங்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன் அரன்பணி அறக்கட்டளை, தமிழக ஓதுவாா் மூா்த்திகள் நலச் சங்கம் சாா்பில் மாத ஊதியத்தில் ஓதுவாா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com