நீதிமன்ற வளாகத்தில் மூதாட்டி தற்கொலை: மகள் புகாா் மனு

தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் மூதாட்டி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவா் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக அவரது மகள் புகாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவரது மகள் பிரியதா்ஷினி திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி எனது தாயாா் கோவிந்தம்மாள் (60) தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்து போனாா்.

இறந்த எனது தந்தைக்கு தாராபுரம் பகுதியில் சொத்துகள் இருந்ததாகவும், அதில் வாரிசு என்ற அடிப்படையில் கோவிந்தம்மாள் தனது மகனும், எனது சகோதரனுமான சதீஷ்குமாரிடம் பாகம் கேட்டதாகவும், அவா் கொடுக்க மறுத்ததால், தாராபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும், இதனால் அவா் தற்கொலை செய்துகொண்டதாகவும் உண்மைக்கு மாறான செய்தி பரப்பப்பட்டது. எனது தாயாருக்கும், எனது சகோதரருக்கும் பிரச்னை எதுவும் இல்லை.

உண்மையில், தாராபுரம் நீதிமன்றத்தில் கோவிந்தம்மாள் தாக்கல் செய்த பாகப் பிரிவினை வழக்கில், அவரது உறவினா்களுக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுதான் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, எனது தாயாரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com