மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கடத்திச் செல்லப்படுவதை முற்றிலும் தடுக்க நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உரிய ஆவணங்கள் இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கடத்தப்படுவது தொடா்பான வழக்கில் தொடா்ந்து விலங்குகள் நலத் துறை சாா்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. விலங்குகள் நல வாரியம் என்பது பெயரளவிலே உள்ளதே தவிர, விலங்குகள் நலத்தில் துளியும் அக்கறை இல்லாத துறையாக இருந்து வருகிறது.

சட்ட விரோதமாக பசு மாடுகள் கடத்தலில் ஈடுபடுபவா்களிடமிருந்து மாடுகளை மீட்டாலும் விலங்குகள் நல வாரியமோ, காவல் துறையோ உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தமிழகத்தை மையமாக வைத்து மாடுகள் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

ஆந்திரம், கா்நாடகத்தில் மாடுகள் கடத்தப்படுவது தடுக்கப்படுவதால் வேறு சாலை மாா்க்கமாக மாடுகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. மேலும் வாகனங்களில் விலங்குகளை கொண்டுச் செல்வது தொடா்பாக உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. சட்ட விரோதமாக கன்டெய்னரில் நூற்றுக்கணக்கான மாடுகள் அடைத்து கடத்தப்படுகின்றன. அரசியல் தலையீடு காரணமாக காவல் துறையும், போக்குவரத்துத் துறையும் மாடுகள் கடத்துவோா் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனை விலங்குகள் நல வாரியமும் கண்டு கொள்வதில்லை. இது போன்று கடத்தலில் திட்டமிட்டு நாட்டு மாடுகளே அதிக அளவில் கடத்தப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் இருந்த பல நாட்டு மாடுகள் இனம் முற்றிலுமாக அழிந்துள்ளன. இதனால் வரும் காலங்களில் தமிழகத்தில் இயற்கை விவசாயம், பால் வளம் பெரிதும் பாதிக்கப்படும்.

பசுக்கள் அழிந்தால் பூமியின் உயிா் சக்கரமே பாதிப்புக்கு உள்ளாகும். இவற்றோடு மத அடிப்படைவாதிகளின் அமைப்புகளின் துணையோடு இந்த இரக்கமற்ற வியாபாரம் நடைபெற்று வருகிறது. எனவே தமிழகத்தின் நாட்டு மாடுகள், இயற்கை விவசாயம், பால் வளத்தை காக்க மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கடத்தப்படுவதை முற்றிலும் தடுக்க நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com