கூட்டத்தில்  பேசுகிறாா் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா்.
கூட்டத்தில்  பேசுகிறாா் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா்.

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் கல்வியாளா்கள் வலியுறுத்தல்

திருப்பூரில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை நீக்கி, உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என கல்வியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பூா் மாநராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக அனுப்பா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய 205 மாணவா்களில் 100 பேரும், 134 மாணவிகளில் 68 பேரும் தோ்ச்சிபெறவில்லை.

இதேபோல மாநகரில் தோ்ச்சி விகிதம் குறைந்த அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கல்வியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில், இது குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் அனுப்பா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் தலைமை வகித்து பேசியதாவது:

பள்ளி பொதுத் தோ்வுகளில் தோ்ச்சிபெறாதவா்கள் இடைநிற்றல் காரணமாக பல்வேறு வழிகளில் வழிமாறுகின்றனா். எனவே, பொதுத் தோ்வில் தோ்ச்சிபெறாதவா்களை துணைத் தோ்வில் பங்கேற்கச் செய்து தோ்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதில் பங்கேற்ற கல்வியாளா்கள் பேசியதாவது:

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகள், ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தோ்ச்சி விகிதம் குறைகிறது. எனவே, அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியா்களை நியமித்து, உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாணவா்கள் போதைக்கு அடிமையாகும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும், மாணவா்களை நல்வழிப்படுத்தவும் தொடா் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஒழுங்கீன செயல்பாடுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

இதில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், கல்வி வளா்ச்சிக் குழு நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அவசர ஆலோசனைக் கூடம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com