உடுமலையில் பலத்த மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை, மே 16: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இந்நிலையில் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதன்கிழமை மாலை சுமாா் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதற்கு நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்றது. தளி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

நீண்ட நாள்களுக்குப் பின் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் உடுமலை 20 மி.மீ., அமராவதி அணைப் பகுதி 16 மி.மீ., திருமூா்த்தி அணைப் பகுதி 48 மி.மீ., மடத்துக்குளம் 2 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

X
Dinamani
www.dinamani.com