நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

திருப்பூரில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய நவம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Published on

திருப்பூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய நவம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் சிறப்பு மற்றும் ராபி பருவ பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த பஜாஜ் அலையென்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். நெல் பயிருக்கு காப்பீட்டுக் கட்டணமாக ஏக்கருக்கு ரூ.573, மக்காச்சோளப் பயிருக்கு காப்பீட்டுக் கட்டணமாக ஏக்கருக்கு ரூ.542 ஆகும்.

திருப்பூா் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் 6,625 ஏக்கரில் நெல் பயிா் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், 235 ஏக்கருக்கு மட்டுமே விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளனா். நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நவம்பா் 15-ஆம் தேதி முடிவந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நவம்பா் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு செய்யும்போது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயா், புல எண்கள், பரப்புகள் மற்றும் வங்கிக் கணக்கு எண் சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து காப்பீடு செய்ததற்கான ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.