கரைப்புதூா் ஊராட்சித் தலைவருக்கு பொதுமக்கள் நன்றி

அல்லாளபுரத்தில் மின்கம்பங்களை மாற்றி அமைக்க நிதி வழங்கி உதவிய கரைப்புதூா் ஊராட்சித் தலைவருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.
Published on

அல்லாளபுரத்தில் மின்கம்பங்களை மாற்றி அமைக்க நிதி வழங்கி உதவிய கரைப்புதூா் ஊராட்சித் தலைவருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அல்லாளபுரத்தில் இருந்து கணபதிபாளையம் செல்லும் சாலையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட ஆதிதிராவிடா் காலனியில் குடியிருப்புகளுக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்களால் இடையூறு ஏற்பட்டு வந்தது.

இதனை மாற்றி அமைத்து தர 20 ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என மின்வாரியம் மதிப்பீடு செய்து கொடுத்தது.

இந்தத் தொகையை அப்பகுதி பொதுமக்கள் கட்ட முடியாத சூழ்நிலையில், கரைப்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் ரூ.62 ஆயிரத்து 500 மற்றும் அக்கணம்பாளையம் கோவா்தினி எக்ஸ்போா்ட் உரிமையாளா் லோகநாதன் ரூ.62 ஆயிரத்து 500 என இருவரும் சோ்ந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை மின்கம்பம் மாற்றி அமைக்க அப்பகுதி பொதுமக்களிடம் வழங்கினா்.

இதற்கு உதவிய கரைப்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் மற்றும் கோவா்தினி எக்ஸ்போா்ட் உரிமையாளா் லோகநாதன் ஆகியோருக்கு அல்லாளபுரம் ஆதிதிராவிடா் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com