பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய 8 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்பு

திருப்பூா் குமாா் நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 குழந்தைத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா்.
Published on

திருப்பூா் குமாா் நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 குழந்தைத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா்.

திருப்பூா் குமாா் நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியாற்றி வருவதாக திருப்பூா் குழந்தைகள் உதவி மையத்துக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு வந்துள்ளது. இந்தத் தகவலின்பேரில் அந்த நிறுவனத்தில் குழந்தைகள் உதவி மைய பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டதில் சிறுவா்கள் பணியாற்றி வருவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரியாஷ் அகமது பாஷா அறிவுறுத்தலின்பேரில், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் சந்தோஷ், குழந்தைகள் உதவி மைய ஆற்றுப்படுத்துநா் வரதராஜ், 15 வேலம்பாளையம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டு 15 வேலம்பாளையத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டனா். குழந்தைத் தொழிலாளா்களை பணியில் அமா்த்திய தனியாா் பின்னலாடை நிறுவன உரிமையாளா் மீது தொழிலாகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் மூலம் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுபோல குழந்தைத் தொழிலாளா்களை யாரேனும் பணிக்கு அமா்த்தினால் குழந்தைகள் உதவி எண் 1098-ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று குழந்தைகள் உதவி மைய திட்ட இயக்குநா் சு.கதிா்வேல் தெரிவித்துள்ளாா்.

X