திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ்  தலைமையில்  நடைபெற்ற விவசாயிகளுக்கான  குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.
திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ்  தலைமையில்  நடைபெற்ற விவசாயிகளுக்கான  குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

Published on

எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை சாலையோரங்களில் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.

இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு விளைநிலங்கள் வழியாக ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கிபாளையம், கணபதிபாளையம், நாரணாபுரம், உகாயனூா், கண்டியன்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் எண்ணெய் குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும். பாரத் பெட்ரோலியம் சாா்பில் புதிதாக திட்டமிட்டுள்ள 3- ஆவது திட்டத்தை ரத்து செய்ய கோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கோவை - கரூா் எண்ணெய் குழாய் திட்டத்தை அகற்றக் கோரியும் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, தமிழகத்தில் எண்ணெய் குழாய் திட்டங்கள் அனைத்தும் சாலையோரமாக அமைக்கப்படும் என தெரிவித்தாா். அதனடிப்படையில் அனைத்து திட்டங்களும் சாலை ஒரமாக அமைக்கப்பட்டது. எனவே, விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் எண்ணெய் குழாய்களை சாலையோரமாக பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எரிசாராய வடிப்பு ஆலையில் துா்நாற்றம் வீசுவதாகப் புகாா்

மடத்துக்குளம் வட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள போத்தநாயக்கனூரைச் சோ்ந்த விவசாயிகள் கே.உலகநாதன். கே.கே.சிவசுப்பிரமணியன் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

அமராவதி எரிசாராய வடிப்பு ஆலைக்கு அருகில் விவசாயம் மற்றும் கால்நடை வளா்க்கும் தொழில் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எரிசாராய வடிப்பு ஆலையில் இருந்து கடுமையான துா்நாற்றம் கழிவு நீரில் இருந்து வெளியேறுகிறது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், எரிச்சல் ஆகிய உபாதைகள் ஏற்படுகின்றன. ஆகவே, இந்த ஆலையில் உடனடியாக ஆய்வு செய்து ஆலையில் நீண்ட நாள்களாக தேக்கிவைக்கப்பட்டுள்ள கழிவு நீரை திறந்தவெளி தொட்டியிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் இருப்பு உள்ளது

கூட்டத்தில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:

வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்க மாவட்ட நிா்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயிா் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது. நெல் 54.65 மெட்ரிக் டன், தானிய பயிறுகள் 94.03 மெட்ரிக் டன், பல்வேறு வகை பயறுகள் 52.80 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிா் விதைகள் 19.00 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 2,935 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 867 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3,622 மெட்ரிக் டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் 882 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், இணை இயக்குநா் (வேளாண்மை) சுந்தரவடிவேல், கோட்டாட்சியா்கள் ஃபெலிக்ஸ்ராஜா (தாராபுரம்) , குமாா்(உடுமலை ), இணைப் பதிவாளா் (கூட்டுறவுசங்கங்கள்) ஆ.பழனிசாமி, இணை இயக்குநா் (கால்நடைப் பராமரிப்புத் துறை) புகழேந்தி, துணை இயக்குநா் (தோட்டக் கலைத் துறை) எஸ்.சசிகலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.