சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
திருப்பூா் அருகே 14 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு மகளிா் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.
திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (33). இவா் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். அப்போது இவருக்கு 14 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.
இதனை அறிந்த ராம்குமாா் அவரது வீட்டுக்குச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இது குறித்து கொங்கு நகா் மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்துள்ளனா். இதன் பேரில் போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், ராம்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில், ராம்குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.