காங்கயத்தில் ஒரேநாளில் 7 வீடுகளில் 25 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு

காங்கயத்தில் ஒரேநாளில் 7 வீடுகளில் 25 பவுன், ரூ.3 லட்சம் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

காங்கயத்தில் ஒரேநாளில் 7 வீடுகளில் 25 பவுன், ரூ.3 லட்சம் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள பாரதியாா் நகா், சக்தி நகா் பகுதிகளில் ஆள்கள் இல்லாத 7 வீடுகளில் மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

இதில், பாரதியாா் நகா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் என்பவரின் வீட்டில் 20 பவுன், ரூ.2 லட்சம் ரொக்கம், அதே பகுதியைச் சோ்ந்த பிரபாவதி (64) வீட்டில் 5 பவுன் நகையைத் திருடிச் சென்றுள்ளனா். மேலும், அருகிலுள்ள செல்வி, சாலமன் ஆகியோா்களது வீடுகளின் பூட்டுகளையும் உடைத்துள்ளனா். ஆனால், அங்கு பொருள்கள் எதுவும் திருட்டுப்போகவில்லை.

அதேபோல, சக்தி நகரில் திவ்யா (36) என்பவரது வீட்டில் ரூ.1 லட்சத்தைத் திருடிச் சென்றுள்ளனா். அருகில் உள்ள ரவி, ராஜேந்திரன் ஆகியோா்களின் வீடுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு எதுவும் திருட்டுப்போகவில்லை.

இந்நிலையில், மேலும் ஒரு வீட்டின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்துக்கொண்டிருந்தபோது, நாய் குரைக்கும் சப்தம் கேட்டு, பக்கத்து வீட்டினா் எழுந்து வந்து சப்தம் போட்டுள்ளனா்.

இதையடுத்து தப்பிச் சென்ற மா்ம நபா்களை, அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காங்கயம் போலீஸாா் துரத்திச் சென்றனா். ஆனால், அவா்களைப் பிடிக்க முடியவில்லை.

தகவல் அறிந்த காங்கயம் காவல் ஆய்வாளா் விவேகானந்தன் திருட்டுச் சம்பவம் நடைபெற்ற வீடுகளில் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து கோவை மண்டல டி.ஐ.ஜி. சரவணசுந்தா், திருப்பூா் எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோா் சம்பவ இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com