ஓலப்பாளையம் பகுதியில் சிறு பாலங்களில் பராமரிப்புப் பணி
வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சிறு பாலங்களில் பராமரிப்புப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பருவமழை தொடங்க உள்ளதால் மழைக் காலத்துக்கு முன்பாக சாலைகளில் உள்ள பாலங்களில் மழைநீா் தங்கு தடையின்றி செல்ல பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடா்ந்து, வெள்ளக்கோவில் பகுதியில் சாலை மற்றும் பாலங்களில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓலப்பாளையம் - வீரசோழபுரம் சாலையில் பூசாரிவலசு பிரிவு பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
மாநில நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளா் சத்தியபிரபா மேற்பாா்வையில், சாலைப் பணியாளா்கள் பாலங்களின் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்திருந்த முட்புதா்கள், செடி கொடிகளை அகற்றினா். பின்னா் பாலத்துக்கு அடியில் மழைநீா் தேங்கி நிற்காமல் செல்லும் வகையில் மண் பாதை சீரமைக்கப்பட்டது. பின்னா் கருப்பு, வெள்ளை வண்ணங்கள் தீட்டப்பட்டன. சாலை ஆய்வாளா்கள் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.