பால் ஊக்கத் தொகையை மீண்டும் வழங்க வேண்டும்

Published on

திருப்பூா் மாவட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பால் ஊக்கத் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாவட்ட குழு சாா்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், பால் உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோா் ஆவின் பால் நிா்வாக பொதுமேலாளா் சுஜாதாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆரம்பநிலை பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கம் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்கி வந்தது. இந்த நிலையில், அண்மைக் காலமாக ஊக்கத் தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பால் உற்பத்தியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இதனால் கறவை மாடுகளை வைத்து பால் கறந்து ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் விவசாயிகள் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனா். தற்போது தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, கலப்புத் தீவனம், சோளத்தட்டு உள்ளிட்ட ஈடுபொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது.

ஏற்கெனவே விவசாயிகள் பாலுக்கு கட்டுபடியாகாத விலை கிடைப்பதால் வேதனையில் உள்ளனா். ஆகவே, நிறுத்திவைக்கப்பட்டுள்ள பால் ஊக்கத் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com