வீட்டில் நகை திருட்டு: 2 போ் கைது
பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில் வீட்டில் நகை திருடிய 2 பெயிண்டா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் வாவிபாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ். இவரது மனைவி சரண்யா (30). இவா்கள் அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனா்.
இதில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா்களின் வீட்டில் பெயிண்டிங் வேலை நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் இருந்த 5 பவுன் நகை திருடு போயுள்ளது. இது குறித்து சரண்யா அளித்த புகாரின்பேரில், காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், நகை திருடியது வீட்டில் பெயிண்டிங் வேலைக்கு வந்த திருப்பூா் தென்னம்பாளையத்தைச் சோ்ந்த நாகராஜ் (60), மங்கலத்தைச் சோ்ந்த பாலகுரு (35) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்தனா். மேலும், இருவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.