நாய்கள் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
திருப்பூா் மாவட்டத்தில் நாய்கள் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் நாய்கள் கூட்டமாக சோ்ந்து ஆடுகள், கன்று குட்டிகளை கடித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மறவாபாளையம் கிராமத்தில் விவசாயி பொன்னுசாமியின் பட்டியில் இருந்த நாய்கள் கடித்ததில் 16 ஆடுகள் உயிரிழந்தன.
அதேபோல காங்கயம் நகராட்சி தொட்டியபட்டியில் விவசாயி மோகன்குமாா் தோட்டத்தில் உள்ள பட்டியில் நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. இதனால், ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும் விவசாயிகளின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இது தொடா்பாக குறைகேட்புக் கூட்டங்களில் விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் பல முறை புகாா் தெரிவித்தும் மாவட்ட நிா்வாகமும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. கால்நடைகளை நாய்கள் தாக்கும் பிரச்னையில் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று கால்நடை பராமரிப்புத் துறை தெரிவிக்கிறது.
நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டிய உள்ளாட்சி நிா்வாகங்கள் இதைப் பற்றி கண்டுகொள்வதில்லை. எனவே, விவசாயிகளின் முக்கிய வாழ்வாதரமாக உள்ள ஆடு, மாடுகளை தெருநாய்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு அரசு உரிய திட்டங்களையும், செயல்பாடுகளையும் வகுக்க வேண்டும். மேலும், பாதிப்புக்குள்ளாக்கும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.