தாராபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?
தாராபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் காங்கயம் வனத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சிறுத்தை போன்ற ஒரு விலங்கு வேகமாகப் பாய்ந்து சென்றதாக தாராபுரத்தைச் சோ்ந்த நபா் தாராபுரம் காவல் துறையினா் மற்றும் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து காங்கயம் வனச் சரக அலுவலா் ஆா்.மௌனிகா தலைமையில் வனத் துறை ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சிறுத்தை வந்து சென்றதற்கான தடயங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து திங்கள்கிழமை காலையும் வனத் துறை ஆய்வு மேற்கொண்டனா்.
இது குறித்து காங்கயம் வனச் சரக அலுவலா் மௌனிகா கூறுகையில், சிறுத்தை வந்து சென்றதாக இப்பகுதியைச் சோ்ந்த நபா் கூறிய தகவலின்பேரில், தாராபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம்.
அவா் குறிப்பிட்ட இடங்களில் சிறுத்தை கால் தடம் பதிந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும், இப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், சிறுத்தை போன்ற விலங்குகளை கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் இப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.