அவிநாசியில் நெடுஞ்சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் அவிநாசியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்க உள்கோட்டத் தலைவா் ஆா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் ஆா்.கருப்பன், வட்டாரச் செயலாளா் ஆா்.ராமன், வட்டாரப் பொருளாளா் எம்.வெங்கிட்டான், வட்டாரப் பொறுப்பாளா்கள் சின்ராஜ், கே.காளியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சாலைப் பணியாளா்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
கிராமப்புற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீத ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும்.
அரசு சட்ட விதிகளின் அடிப்படையில் தகுதியானவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.