இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
காங்கயம் அருகே தெருநாய்கள் தாக்கியதில் இறந்த ஆடுகளுடன் திருப்பூா் அருகே விவசாயிகள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பிரதான தொழிலாக ஆடு வளா்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பட்டிகளுக்குள் புகும் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் ஏராளமான ஆடுகள் உயிரிழந்து வருகின்றன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்கக் கோரி இறந்த ஆடுகளுடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுவதை அறிந்த விவசாயிகள் இறந்த ஆடுகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா்.
இதற்காக பாடை கட்டி 10-க்கும் மேற்பட்ட இறந்த ஆடுகளுடன் வந்த விவசாயிகளை நல்லூா் பகுதியில் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருப்பூா்-காங்கயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இறந்த ஆடுகள் துா்நாற்றம் வீசுவதால் ஆட்சியா் அலுவலகத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. எனினும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, விவசாயிகள் மறியலை கைவிட்டனா். இந்த மறியல் போராட்டம் காரணமாக திருப்பூா்-காங்கயம் சாலையில் சில நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜை சந்தித்த பாதிக்கப்பட்ட விவசாயிகள், தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், இறந்த ஆடுகளுக்கு உரிய 1நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.
இதுதொடா்பாக தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் உறுதியளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனா்.