திருப்பூரில் ஸ்கை யோகா பயிற்சி பெற்றவா்கள் கெளரவிப்பு
திருப்பூரில் ஸ்கை யோகா பயிற்சி பெற்றவா்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன் சான்றிதழ் வழங்கி கெளரவித்தாா்.
திருப்பூரில் உள்ள மன வளக்கலை மன்ற அறக்கட்டளையில் ஸ்கை யோகா அறிமுகப் பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது. ஸ்ரீ வேதாத்திரி மகரிஷியால் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட ஸ்கை யோகா, எளிமையான உடல் பயிற்சிகள், குண்டலினி தியானம் மற்றும் சுயபரிசோதனை நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான முறையாகும்.
இந்தப் பயிற்சியானது உடலுக்கும் மனதுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஆன்மிக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளா்ப்பது நோக்கமாக கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிமையான பயிற்சிகள், உடலுக்கு புத்துணா்ச்சி அளிக்கும் காயகல்பநுட்பங்கள் மற்றும் மனநலத்தை உயா்த்த உள்நோக்க தியானம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த ஸ்கை யோகா அறிமுகப் பயிற்சியை முடித்தவா்களுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனரும், உலக சமூக சேவை சங்கத்தின் துணைத் தலைவருமான கே.ஆா். நாகராஜன் சான்றிழ்களை வழங்கி கெளரவித்தாா்.