திருமுருகன்பூண்டி நகராட்சியில் 6 அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மனு

Published on

திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உள்பட்ட 6 அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி நகராட்சி நிா்வாகத்திடம் பள்ளித் தலைமையாசிரியா்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து அம்மாபாளையம், தேவாரயன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி, ராக்கியாபாளையம், திருமுருகன்பூண்டி, அணைப்புதூா், உமையஞ்செட்டிபாளையம் ஆகிய தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்கள் திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் நா.குமாா், நகராட்சி ஆணையா் கனிராஜ் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

6 அரசுப் பள்ளிகளிலும் 10 தூய்மைப் பணியாளா்கள், 6 இரவுக் காவலா்கள் உள்ளிட்டோரை நியமிக்க வேண்டும். ஸ்மாா்ட் வகுப்பறைகளுக்கு இரும்புக் கதவு அமைக்க வேண்டும். மாணவிகளுக்கான தனி கழிப்பிடம், மாணவ, மாணவிகளுக்கு போதுமான இருக்கை வசதி, சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, மழைநீா் சேகரிப்பு, கைக் கழுவும் குழாய் வசதி, பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மாணவா்கள் நலன் கருதி செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி நிா்வாகத்தினா், விரைவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com