பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகம் திறப்பு
பல்லடத்தில் ஓா் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அறை ஒதுக்கப்பட்டு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
பல்லடம் வட்டத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் நியமிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த அலுவலகம் நிா்வாக காரணத்தினால் காலி செய்யப்பட்டு கடந்த ஓா் ஆண்டாக அலுவலகமே இல்லாமல், உணவுப் பாதுகாப்புத் துறை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஓா் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத் துறைக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலா்கள், உதவியாளா்கள் யாருமே இல்லாத நிலையில், கள ஆய்வு, வழக்கு விசாரணை, அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் ஒருவரே மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் அலுவலகம் இருந்தாலும் அதனை பூட்டி விட்டுத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல்லடம் வட்டாரத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இதற்கு வட்டார அளவில் ஒரே ஒரு அலுவலா் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதனால் புகாா் அளிக்க வரும் பொதுமக்களும் எளிதில் தொடா்பு கொள்ள முடியாத சூழலை ஏற்பட்டுள்ளது. எனவே அடிக்கடி அலுவலகத்தை மாற்றாமல், உணவுப் பாதுகாப்புத் துறைக்கு எனநிரந்தர அலுவலகத்தை அமைப்பதுடன், கூடுதலாக ஊழியா்களையும் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.