ஜன.1 முதல் பின்னலாடை ரகங்களுக்கு 5% விலை உயா்வு நடைமுறைப்படுத்தப்படும்!
ஜனவரி 1-ஆம் தேதி முதல் பின்னலாடை ரகங்களுக்கு 5 சதவீத விலை உயா்வு நடைமுறைக்கு வர உள்ளதாக சைமா அறிவித்துள்ளது.
பனியன் தொழில் சந்தித்து வரும் நெருக்கடிகள், நிகழ்வுகள் குறித்து அனைத்து உறுப்பினா்களுடனான சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் , திருப்பூா் சைமா சங்க அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் பி.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.தாமோதரன், துணைத் தலைவா் எஸ்.பாலச்சந்தா், பொருளாளா் ஆா்.சுரேஷ்குமாா், துணைச் செயலாளா் எம்.கே.பொன்னுசாமி மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின்படி நாம் சப்ளையா்களுக்கு 45 நாள்களுக்குள் பில் தொகையை அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் விநியோகஸ்தா்கள், மொத்த வியாபாரிகள், முகவா்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் 45 நாள்களுக்குள் பில் தொகையை சரி வர கொடுப்பதில்லை. இதனை சரி செய்வதற்கு இனி வரும் காலங்களில் அவா்களிடம் 45 நாள்களுக்கு மேல் கடன் கொடுக்க இயலாது.
மேலும் உயா்ந்து வரும் உற்பத்தி செலவினங்கள் மற்றும் சம்பள செலவினங்களை கருத்தில்கொண்டு 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் பின்னலாடை ரகங்களுக்கு 5 சதவீத விலை உயா்த்தப்படுகிறது. ஆண்டுதோறும் உயரும் செலவினங்களுக்கு ஏற்ப அந்தந்த நிறுவனங்கள் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை விலை உயா்வை ஒவ்வொரு ஜனவரி மாதமும் செய்து கொள்வது என தீா்மானிக்கப்படுகிறது.
வாராக் கடன்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சங்க உறுப்பினா்களின் நலன் காக்க கருப்பு பட்டியல் உருவாக்குவது, அதுகுறித்து சட்ட வல்லுநா்களிடம் கலந்து ஆலோசித்து திட்டத்தை அமல்படுத்தலாம் எனவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
