இந்து முன்னணியினரை தாக்கிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

இந்து முன்னணி நடத்திய போராட்டத்தில் அத்துமீறிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை
Published on

இந்து முன்னணி நடத்திய போராட்டத்தில் அத்துமீறிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: காா்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்றத் தீா்ப்பை அவமதித்த திமுக அரசைக் கண்டித்து இந்து முன்னணி ஞாயிற்றுக்கிழமை மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்திருந்தது.

தமிழகம் முழுவதும் நடந்த இந்த போராட்டத்தில் பல இடங்களில் காவல் துறையினா் இந்து முன்னணி பொறுப்பாளா்களை தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது காவல் துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பொய்க்க வைத்திருக்கிறது.

தென்காசி, அரியலூா், பெரம்பலூா், தூத்துக்குடி, சென்னை, கோவை, புதுக்கோட்டை, திருச்சி, கமுதி ஆகிய பகுதிகளில் போராட்டத்துக்கு முதல் நாளே இந்து முன்னணி பொறுப்பாளா்களை காவல் துறை வீட்டுக் காவலில் வைத்தது.

கோவை செல்வபுரம் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை ஒரு மண்டபத்தில் காவலில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனா். அறவழிப் போராட்டம் நடத்தியவா்களை ரெளடிகள்போல, நடத்திய விதம் அதிா்ச்சியளிக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்கும் காவல் துறையினரே நீதிமன்ற தீா்ப்பை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறிய இந்து முன்னணியினா் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா்.

2 வாரங்களுக்கு முன்பாக கடையநல்லூரில் நடைபெற்ற தமுமுக ஆா்ப்பாட்டத்தில் மதக் கலவரத்தை தூண்டும்விதமாக பேசிய பொறுப்பாளரை இதுவரை காவல் துறையினா் கைது செய்யவில்லை. திருப்பரங்குன்றம் தீபம் தொடா்பாக தீா்ப்பு வழங்கிய நீதியரசா் ஜி.ஆா்.சுவாமிநாதனை ஒருமையில் பேசியவா்களையும் இதுவரை கைது செய்யவில்லை. ஆனால் நீதிமன்ற தீா்ப்புக்கு ஆதரவாகப் போராடிய பக்தா்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது. தமிழகத்தில் தொடா்ந்து சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டு வருகிறது. நியாயமான ஆா்ப்பாட்டம், போராட்டங்களுக்கு கூட அனுமதி வழங்குவதில்லை. மீறி போராடினால் நசுக்கப்படுகின்றனா்.

எனவே, இந்து முன்னணி பொறுப்பாளா்களை தாக்கிய காவல் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சட்டப் போராட்டமும், அறப் போராட்டமும் தொடரும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com