பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு குறித்து புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளில் குறிப்பிடப்படவில்லை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு குறித்து புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
Published on

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு குறித்து புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: கடந்த நவம்பா் 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 4 தொழிலாளா் சட்டத் தொகுப்புகளும் உழைக்கும் மக்களை கொத்தடிமைகளாக மாற்றக் கூடியவை. 150 ஆண்டு காலப் போராட்டத்தில் பெற்ற பல உரிமைகளை இந்த சட்டத் தொகுப்புகள் பறிக்கின்றன.

தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைமை குறித்த 13 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு ஒரு சட்டத் தொகுப்பும், தொழில் உறவு சாா்ந்த 3 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு ஒரு சட்டத் தொகுப்பும், ஊதியம், குறைந்தபட்ச ஊதியம், சம வேலைக்கு சம ஊதிய சட்டம் உள்ளிட்ட 4 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு ஒரு சட்டத் தொகுப்பும், சமூகப் பாதுகாப்பு தொடா்பான 9 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு ஒரு சட்டத் தொகுப்புமாக மொத்தம் 29 சட்டங்கள் அழிக்கப்பட்டு 4 புதிய சட்டத் தொகுப்புகள் மூலம் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட கால நிா்ணய வேலை எனக் கூறி நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளா்கள் இல்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளனா். 300 பேருக்கு கீழ் இருக்கக் கூடிய நிறுவனங்களில் நிலை ஆணை தேவையில்லை எனக் கூறி உள்ளனா். இந்தியாவில் 74 சதவீத தொழிற்சாலைகள் 300 பேருக்கு கீழ் வேலை செய்யக் கூடியவை ஆகும். இந்த ஆலைகளை மூடுவதற்கு அரசு அனுமதி தேவையில்லை.

புதிய சட்டத் தொகுபின்படி வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்து 60 நாள்களுக்கு வேலை நிறுத்தத்துக்கு போகக் கூடாது. அப்படி வேலைநிறுத்தம் செய்தால் அந்த தொழிலாளா்களையும் தொழிற்சங்க தலைவா்களையும் கைது செய்து சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும். புதிய 4 சட்டத் தொகுப்புகளில் நல வாரியத்துக்கான உத்தரவாதம் எதுவும் இல்லை.

தொழிலாளா் நீதிமன்றங்களில் 12 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதிய சட்டத் தொகுப்பில் தொழிலாளா் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. 20 பேருக்கு கீழ் இருந்தால் அவை நிறுவனமாக கணக்கில் கொள்ளப்படாது. இதன் மூலம் 62 சதவீத குறு, சிறு, நடுத்தரத் தொழில்களில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது.

இந்திய தொழிலாளா்களின் 90 சதவீதத்தினா் முறைசாரா தொழிலாளா்கள் என்பதால், அவா்களுக்கு சட்ட சலுகைகள் அமலாகாது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தடுப்புச் சட்டம் பற்றி இந்த 4 தொகுப்புகளிலும் எதுவும் இல்லை. பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவே இந்த சட்டத் தொகுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தொழிலாளா் சட்டங்களுக்கு எதிராக தொடா்ந்து போராடுவோம்.

பேட்டியின்போது, கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com