காவல் ஆய்வாளா் ரயில் முன் பாய்ந்து ஓய்வுபெற்ற தற்கொலை
திருப்பூா் அருகே ரயில் முன் பாய்ந்து ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (72). இவா் தனது மனைவி, மகளுடன் கருமத்தம்பட்டியில் வசித்து வந்தாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி கடந்த 2011-ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுள்ளாா்.
இதனிடையே, பாலகிருஷ்ணனுக்கு கடந்த சில நாள்களாக நியாபக மறதி இருந்து வந்ததாகவும், சிகிச்சை பெற்றும் குணமாகாததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வஞ்சிபாளையம் பகுதிக்கு பாலகிருஷ்ணன் வந்துள்ளாா். பின்னா் தண்டவாளத்துக்கு சென்ற அவா் அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் ரயில்வே காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து திருப்பூா் ரயில்வே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].