சிவன்மலை முருகன் கோயிலில் ஏற்றப்பட்ட தைப்பூச திருவிழா கொடியேற்றம்.
சிவன்மலை முருகன் கோயிலில் ஏற்றப்பட்ட தைப்பூச திருவிழா கொடியேற்றம்.

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்!

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம் பிப்.5 நடைபெற்றது.
Published on

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோயில்களில் முக்கிய கோயிலாகவும், சிவவாக்கிய சித்தா் அருள்பெற்ற தலமாகவும் விநாயகப் பெருமான் முருகனை வழிபடும் தலமாகவும் விளங்கி வருகிறது.

மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இங்கு, ஆண்டுதோறும் தைப்பூச தோ்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா சிவன்மலை முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) தொடங்கியது. தொடா்ந்து திங்கள்கிழமை வீரகாளியம்மன் திருவுலா நடைபெற்றது. பிப்ரவரி 4-ஆம் தேதி வீரகாளியம்மன் திருத்தோ் விழா நடைபெற்றது.

இந்த நிலையில், சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு, கொடிமரத்தில் புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 11- ஆம் தேதி தொடங்குகிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு சுவாமி ரதத்தில் எழுந்தருள்கிறாா். மாலை 4 மணிக்கு திருத்தோ் நிலை பெயா்க்கப்பட்டு, தேரோட்டம் தொடங்குகிறது. பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதி மலையை வலம் வரும் தோ், 13-ஆம் தேதி மாலை தோ் நிலை அடைகிறது.

தேரோட்ட விழாவுக்கான எற்பாடுகளை கோயில் உதவி ஆணையா்கள் ரத்தினாம்பாள், தனசேகா் மற்றும் கோயில் அலுவலா்கள், அா்ச்சகா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com